பாகிஸ்தான் அத்துமீறலை தடுக்கும் வகையில் ராணுவ அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் அமைச்சர் அருண்ஜெட்லி தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாகிஸ்தான் அத்துமீறலை தடுக்கும் வகையில் ராணுவ அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் அமைச்சர் அருண்ஜெட்லி தகவல்

புதுடெல்லி: பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலை தடுக்கும் வகையிலும், காஷ்மீரில் அடிக்கடி நிகழும் கலவரத்தை கட்டுப்படுத்தும் பொருட்டும் ராணுவ அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடந்து வருகின்றனர்.

இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர். பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ உதவி செய்து வருகின்றனர்.

சமீபத்தில் 2 வீரர்களின் தலையை சிதைத்து கொடூரமாக பாகிஸ்தான் ராணுவத்தினர் கொன்றனர்.

இதுபோன்ற மோசமான நடவடிக்கைகளில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இந்தியாவும் இதற்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் நிலைகள், முகாம்கள் மீது இந்திய ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.

இதனால் எல்லை பகுதிகளில் பதட்டம் நிலவி வருகிறது. இதுதவிர காஷ்மீரிலும் அசாதாரண சூழல் நிலவுகிறது.

பிரிவினைவாதிகள், மாணவர்கள் தொடர்ந்து கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பாதுகாப்பு படையினருக்கும், கலவரக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.

எல்லை கட்டுப்பாடு கோடு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல், தீவிரவாதிகள் ஊடுருவல், காஷ்மீரில் கலவரக்காரர்களின் கல்வீச்சு போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், ராணுவத்தினருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘அசாதாரண சூழல் நிலவி வரும் பகுதிகளில், அதை எதிர்கொள்ளும் வகையில் ராணுவ அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. சூழ்நிலைக்கு தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும்போது, அதுகுறித்து நாடாளுமன்ற குழுவினருடன் அவர்கள் ஆலோசனை நடத்த வேண்டிய அவசியம் இல்லை’’ என்றார்.


.

மூலக்கதை