மனிதாபிமான டாக்சி டிரைவருக்கு குவியும் வாழ்த்துக்கள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மனிதாபிமான டாக்சி டிரைவருக்கு குவியும் வாழ்த்துக்கள்

மங்களுர்: கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் காவ்யா ராவ் என்பவரின்  முகநூல் பக்கத்தில் எழுதிய பதிவு ஒன்று இப்போது வைரலாகி வருகிறது. அலுவலக சூழலில் சிக்கிக்கொண்டு வயதான தாய் தந்தையை கவனிக்க முடியாமல் குற்ற உணர்வால் தடுமாறும் பல்வேறு மத்திய தர வர்க்கத்தினரின் புலம்பலும், அதற்கு உதவி செய்த ஒருவரின் செயலையும் பாராட்டி எழுதியதால் அந்தப் பதிவு அதிகம் கவனம் பெற்று இருக்கிறது.

காவ்யா ராவின் பதிவில் கூறியிருப்பது இதுதான். ‘நேற்று முன்தினம் இரவில்  62 வயதான என் அப்பாவிற்கு திடீரென்று  உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

உடனடியாக என்னால் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு செல்ல முடியவில்லை.

எனவே அலுவகத்திலிருந்தவாறே வாடகைக்கு கார் ஒன்றை புக் செய்தேன்.   35 வயதுடைய சுனில் என்ற ஓட்டுநர் உடனடியாக வீட்டுக்கு சென்று அப்பாவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

எனது வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு செல்லும் பாதை குண்டும் குழியுமான பாதை. அந்தப் பாதையில் மிக கவனமாக ஓட்டிச் சென்றவர் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு சென்றதும்  6 கிமீ தூரத்துக்கு ரூ. 140 கட்டணம் என எனது அலைபேசிக்கு குறுந்தகவல் வந்தது.   உடனடியாக அம்மாவை தொடர்புகொண்ட நான்  கூடுதலாக 10 ரூபாய் சேர்த்து ஓட்டுநருக்கு ரூ. 150 தருமாறு கூறினேன்.

எனது அம்மாவும்  ரூ. 150 பணத்தை அவருக்கு கொடுத்த போது, அந்தப் பணத்தை சுனில் ஏற்க மறுத்துவிட்டார்.

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் சவாரிக்கு வாடகை வாங்குவதில்லை.

நோயாளிகளுக்கு உதவுவது நம்முடைய கடமை எனக் கூறியுள்ளார் சுனில். எனது அப்பாவும் அம்மாவும் பல முறை வற்புறுத்திய போதும் அவர் கட்டணத்தை வாங்கவில்லை.

குறைந்தபட்சம் பெட்ரோலுக்கான தொகையையாவது வாங்கி கொள்ளுமாறு கூறியும் அவர் பணம் வாங்கவில்லை. இந்த சம்பவம் எனக்கு பெரும் வியப்பை கொடுத்தது.

ஒரு ஏழை  ஓட்டுநரின் மனிதாபிமானம், அவரது பெருந்தன்மையும் எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இத்தகைய நல்ல மனிதர்களால் தான், இந்த உலகம் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது என எழுதிய பதிவுக்கு பயங்கர வரவேற்பு கிடைத்ததோடு, வைரலாகவும்  பரவி வருகிறது.


.

மூலக்கதை