யாழ்ப்பாணத்திற்கு பெருமை சேர்க்கும் கடற்கோட்டை! தனித்தீவில் ஓர் அதிசயம்

PARIS TAMIL  PARIS TAMIL
யாழ்ப்பாணத்திற்கு பெருமை சேர்க்கும் கடற்கோட்டை! தனித்தீவில் ஓர் அதிசயம்

 யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க கடற்கோட்டை, சிறிலங்கா கடற்படையினரால் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது. 

 
காரைநகர்த் தீவுக்கும், வேலணைத் தீவுக்கும் இடையில் அமைந்துள்ள சிறிய மண் திட்டில் கடற்கோட்டை என்று அழைக்கப்படும் அம்மன்னீல் கோட்டை (Hammanheil) அமைந்துள்ளது.
 
17ம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட இந்த கோட்டை சிறைச்சாலையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது நவீனமயப்படுத்தப்பட்டு சுற்றுலா விடுதியாக மாற்றப்பட்டுள்ளது. 
 
கடற்கோட்டைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் பணம் செலுத்தி அங்கு தங்க முடியும். இதன்மூலம் பணம் செலுத்தி ஆடம்பர சிறைச்சாலை அனுபவத்தை பெற்றுக்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
இந்த கடற்கோட்டையில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்ட சில தலைவர்கள் தடுத்து வைக்கப்பட்டதாக கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 
 
1620 ஆம் ஆண்டில் போத்துக்கீசர் யாழ்ப்பாண இராச்சியத்தை முழுமையாகக் கைப்பற்றித் தமது ஆட்சியின்கீழ் கொண்டுவந்த பின்னர், பாக்கு நீரிணைப்பகுதியில் இருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள் வருவதற்கான கடல்வழியின் பாதுகாப்புக்காக இக் கோட்டையை அமைத்தனர். 
 
1658 ஆம் ஆண்டில் ஒல்லாந்தர் யாழ்ப்பாணக் கோட்டையை முற்றுகை இட்டபோது இக் கோட்டையையும் முற்றுகை இட்டுக் கைப்பற்றிக் கொண்டனர். 
 
ஒல்லாந்தர் காலத்திலும் யாழ்ப்பாணத்தின் பாதுகாப்புக்கு இன்றியமையாததாக ஒன்றாக இந்தக் கோட்டை கருதப்பட்டு முற்றிலும் ஒல்லாந்தரைக் கொண்ட படையினர் இக்கோட்டையில் நிறுத்தப்பட்டனர். 
 
இக் கோட்டை எட்டுப் பக்கங்களைக் கொண்ட பல்கோண வடிவம் கொண்டது. இதன் தெற்குப் பக்கத்தில் உள்ள சுவரில் கோட்டைக்கான வாயில் அமைந்துள்ளது. வடகிழக்குப் பக்கச் சுவரில் முக்கோண வடிவிலான ஒரு நீட்சி காணப்படுகிறது. ஒல்லாந்தர் காலத்திலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரையிலும் உள்ளே இரண்டு சிறிய கட்டடங்கள் அமைந்திருந்தன.
 
 

மூலக்கதை