மான்செஸ்டர் குண்டு வெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பினேன் : இந்திய பெண் டாக்டர் பகீர் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மான்செஸ்டர் குண்டு வெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பினேன் : இந்திய பெண் டாக்டர் பகீர் தகவல்

மும்பை: இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பினேன் என இந்திய டாக்டர் ஒருவர் அச்சம் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் நகரில் இசை நிகழ்ச்சியின் போது ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் 22 பேர் பலியாயினர்.

இது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் இந்தியர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை என சுஷ்மா தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் இருந்து நூலிழையில் இந்தியர் ஒருவர் தப்பியது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் உள்ள ஜெய்ப்பூர் நகரைச் சேர்ந்தவர் சோனால் பதக் (41).

இவர் தனது 13 வயது மகள் ஸ்ரேயா, தோழி அன்யா ஆகியோருடன் இசை நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

குண்டு வெடிப்பு நடந்த ஸ்டேடியத்தில் இருந்து சுமார் 8 மைல் தொலைவில் உள்ள அல்ட்ரின்சாம் என்ற இடத்தில் தான் சோனால் பதக் வசித்து வருகிறார். இதுகுறித்து சோனால் பதக் கூறுகையில், நல் வாய்ப்பாக குண்டு வெடிப்பில் இருந்து நானும், எனது குழந்தையும், தோழியும் தப்பினோம்.

இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு வரும் போது நெரிசல் காரணமாக எனது காரை சற்று தள்ளி நிறுத்தி விட்டு காலாற நடந்து வருவது வழக்கம்.

எனவே இம்முறையும் நிகழ்ச்சி முடிவதற்கு 7 நிமிடங்களுக்கு முன்னதாக நாங்கள் வெளியேறி காரை நோக்கி சென்று விட்டோம்.

சரியாக இரவு 10. 20க்கு நடக்க தொடங்கினோம். நாங்கள் வெளியேறிய பின்னர் சரியாக 10. 30க்கு குண்டு வெடித்தது.

சற்று தள்ளி உள்ள அன்டர் கிரவுண்ட் பார்க்கிங்கில் எனது காரை நிறுத்தியிருந்ததால், குண்டு வெடித்த சத்தமோ, அதிர்வையோ என்னால் உணர முடியவில்லை என்று பதற்றத்துடன் விவரித்தார். ஆம்புலன்ஸ்கள் குறுக்கும் நெடுக்குமாக விரைவதை கண்டு விசாரித்த பிறகுதான் குண்டு வெடிப்பு சம்பவம் சோனால் பதக்கிற்கு தெரியவந்துள்ளது.

இது அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தியர்களுக்கு பாதிப்பில்லை : சுஷ்மா

மான்செஸ்டர் நகரில் கணிசமான அளவு இந்தியர்களும் வசித்து வருகின்றனர். இதனால் இந்தியர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருக்குமா என்ற அச்சம் நிலவி வந்தது.

இது குறித்துமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள தகவலில், மான்செஸ்டர் சம்பவத்தில் இந்தியர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. அதுகுறித்து இதுவரை எதுவும் உறுதி செய்யப்படவில்லை.

எனவே இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்.

இருந்த போதிலும் அங்கு குண்டு வெடிப்புக்கு பிறகான சம்பவங்களை உன்னிப்பாக இந்தியா கவனித்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

.

மூலக்கதை