பிளாஸ்டிக் கழிவில் கூடை செய்து மோடிக்கு பரிசாக அனுப்பி அசத்திய பீகார் பெண்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பிளாஸ்டிக் கழிவில் கூடை செய்து மோடிக்கு பரிசாக அனுப்பி அசத்திய பீகார் பெண்

புதுடெல்லி: பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து வித்தியாசமான முறையில் தானே கூடை செய்து அதை பிரதமர் மோடிக்கு பீகார் பெண் ஒருவர் பரிசாக அனுப்பியுள்ளார். பீகார் மாநிலம் சமஸ்திபூரைச் சேர்ந்தவர் ராமசந்திர ஷா.

இவர் விவசாயி. இவரது மனைவி கீதா தேவி.

இவருக்கு வயது 50. வீட்டில் ஓய்வு நேரங்களில் பொழுது போக்காக பிளாஸ்டிக் பொருட்கள், பாலிதீன் கவர்கள் போன்றவற்றை பயன்படுத்தி மறு சுழற்சி முறையில் ஏதேனும் பொருட்களை செய்து பார்ப்பதை கீதா ஆர்வமாக செய்து வந்துள்ளார்.

இதை கண்ட அவரது வளர்ப்பு மகன் மனோஜ் குமார் ஷா இவரது பொருட்களை கண்டு பாராட்டி ஏன் பிரதமர் மோடிக்கு பரிசு பொருளாக செய்து அனுப்பக் கூடாது என்று ஊக்கப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து தான் செய்தவற்றில் அழகான பிளாஸ்டிக் மறு சுழற்சி கூடை ஒன்றை பிரதமர் மோடிக்கு பரிசாக அனுப்பி வைத்தார்.

ஆனால் கீதா தேவியே இதை மறந்து விட்டார். அவர் எதிர்பாராத வகையில் பிரதமர் மோடியிடம் இருந்து கீதாதேவியை பாராட்டி கடிதம் வந்துள்ளது.   அதில் கீதாவின் செயல் ஒரு அருமையான யோசனை.

தூய்மை இந்தியா திட்டத்தை வலுப்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் மறு சுழற்சி உற்பத்தியை கொண்டு சிறு தொழிலை மேம்படுத்தலாம்.

இந்த பரிசு பொருள் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

மோடியின் கடிதத்தை கண்ட கீதா மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டார். ஊரில் உள்ள அனைவரிடமும் பிரதமரின் கடிதத்தை காட்டி பெருமிதம் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவரது கணவர் ராமசந்திர ஷா கூறுகையில், இதை தொழிலாக செய்யும் எண்ணம் இதுவரை இல்லை. அதற்கான முதலீடும் இல்லை.

வங்கியில் கடன் கிடைத்தால் இதை செய்ய தயாராக இருக்கிறோம் என்று குறிப்பிட்டார்.

.

மூலக்கதை