ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளர் யார்? ஆலோசனை நடத்த எதிர்கட்சிகளுக்கு சோனியா அழைப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளர் யார்? ஆலோசனை நடத்த எதிர்கட்சிகளுக்கு சோனியா அழைப்பு

புதுடெல்லி: ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக 26ம் தேதி ஆலோசனை நடத்த எதிர்கட்சிகளுக்கு சோனியா அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதி பிரணாப் பதவிக்காலம் வருகிற ஜூலை மாதத்துடன் நிறைவடைகிறது.

எனவே அதற்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. அண்மையில் நடந்து முடிந்த உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் 4 மாநிலங்களை பாஜ கைப்பற்றியுள்ளது.



இதனால் ஜனாதிபதி தேர்தலில் பாஜ கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் டிஆர்எஸ் போன்ற மாநில கட்சிகள் சில பாஜ வேட்பாளரை ஆதரிக்கும் என தெரிகிறது.

இந்த சூழலில் காங்கிரஸ் தலைமையில் எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இதுகுறித்து நிதிஷ், சீதாராம் யெச்சூரி, மம்தா உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் சோனியாவை தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தினர்.



இதை தொடர்ந்து தற்போது பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்த வருகிற 26ம் தேதி எதிர்கட்சிகளுக்கு சோனியா அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் எந்தெந்த கட்சிகள் பங்கேற்கும் என்பது குறித்து இன்னும் உறுதியான தகவல்கள் வெளிவரவில்லை.

இருந்த போதிலும் லாலுவின் ஆர்ஜேடி, மம்தாவின் திரிணாமுல் உள்ளிட்டவை நிச்சயம் பங்கேற்கும் என தெரிகிறது.

இந்த கூட்டத்தில் கோபால் காந்தி அல்லது முன்னாள் சபாநாயகர் மீரா குமார் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

.

மூலக்கதை