ரசிகர்களுக்கு கடிதம் எழுதிய இயக்குநர் சேரன்

PARIS TAMIL  PARIS TAMIL
ரசிகர்களுக்கு கடிதம் எழுதிய இயக்குநர் சேரன்

 `பாரதி கண்ணம்மா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சேரன். அதைத் தொடர்ந்து பல்வேறு படங்களை இயக்கிவிட்ட சேரன், திருட்டு விசிடி-க்களை ஒழிக்கும் விதமாக. சி2எச் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டார். 

 
அதாவது, சி2எச் என்ற நிறுவனத்தை தொடங்கி, அதன் மூலம் திரைப்படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் புதிய முயற்சியை மேற்கொண்டார். அதன்படி அவர் இயக்கிய ஜே.கே.என்னும் நண்பனின் வாழ்க்கை என்ற படத்தை சி2எச் சேனல் மூலம் வெளியிட்டார். ஆனால் இந்த சேனலுக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. எனவே தனது முயற்சி தோல்வியடைந்துள்ளதாக தெரிவித்து தனது ரசிகர்களுக்கு சமூக வலைதளம் மூலம் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். 
 
 
 
அதில் சேரன் கூறியிருப்பதாவது, 
 
"என் இதயம் நிறைந்த அன்பு ரசிகர்களே தொடர்ந்து எனக்கும் என் திரைப்படங்களுக்கும் ஆதரவு அளிக்கும் தமிழ் பண்பாளர்களே வணக்கம்..
 
மூன்று வருடங்களாக புதிய முயற்சி என்ற நோக்கில் மலையை புரட்டிப்போட்டுவிடலாம் என முயன்று முட்டி முட்டி முடியாமல் தோற்றுப்போனேன்.. பிறகுதான் புரிந்தது இங்கே சிறுகல்லை நகர்த்தக்கூட முடியாத அளவு தவறுகளும் பொறாமையுணர்வுகளும் பரந்தமனப்பான்மை இன்மையும் புரையோடிப்போயிருக்கிறது என.. எனவே இந்த சமூக மாற்றம் என்பது ஒரு நல்லவன் நினைத்து முடியப்போவதில்லை என புரிந்தபின்...
 
 
 
எனக்கு எது வேண்டுமோ அதை நோக்கி மட்டுமே பயணிப்பது என முடிவு செய்து இதோ திரைப்படம் உருவாக்க தயாராகிவிட்டேன். திருட்டு DVD யில் பார்த்தவர்கள் போக ஆன்லைனில் முதல்நாளே எந்த கட்டணமுமின்றி இலவசமாக பார்த்தவர்கள் போக அனுமதியின்றி பஸ்களில் படம் பார்ப்பவர்கள் போக நேர்மையாக உழைப்பை உணர்ந்து எவ்வளவுபேர் பணம் கொடுத்து படம் பார்க்கிறார்களோ அந்த பட்ஜெட்டில் மட்டுமே படம் எடுக்கலாம் என முடிவு செய்து இந்த வருடம் இரண்டு படங்கள் உருவாக்க உள்ளேன்.. எப்போதும்போல உங்கள் ஆதரவும் அரவணைப்பும் தேவை.. நன்றி."
 
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
"முயற்சி என்றுமே தோற்பதில்லை.... `முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்' என்ற வள்ளுவனின் வாக்கு என்றுமே பொய்யாகாது. எனவே தங்களின் முயற்சிக்கு தக்க பலனை விரைவில் அனுபவிப்பீர்கள் சேரன்.
 

மூலக்கதை