ராஜிவ் கொலை குற்றவாளி சிவராசன் ஏன் சந்திரசாமியிடம் போனில் பேசினார்? அவிழாத மர்மம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ராஜிவ் கொலை குற்றவாளி சிவராசன் ஏன் சந்திரசாமியிடம் போனில் பேசினார்? அவிழாத மர்மம்!

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி மரணத்தை தொடர்ந்து, தேடப்பட்டு வந்த விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்த சிவராசன் (ஒற்றைக்கண் சிவராசன்), சுபா, ஓட்டுநர் கீர்த்தி, நேரு, சுரேஷ் மாஸ்டர் ஆகியோர் பெங்களூருக்கு தப்பியோடினர்.

சிவராசன் தலைக்கு ரூ.10 ல‌ட்சம், சுபா தலைக்கு ரூ.5 லட்சம் வெகுமதியாக நிர்ணயித்தது காவல்துறை. இந்த நிலையில், விடுதலை புலிகள் ஆதரவாளர்களுடன் தொடர்பில் இருந்த, ரங்கநாத்தின் வீட்டுக்கு அவர்கள் தப்பியோடி சென்று மறைந்து வாழ்ந்தனர்.

இதை போலீசார் கண்டுபிடித்தனர். எனவே, பெங்களூரின் கோனனேகுன்டேவில் உள்ள ஒரு வீட்டுக்கு ரங்கநாத் குடியேறினார். ஆனால் அதையும் கண்டுபிடித்த சிபிஐ இயக்குநர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார், ஆகஸ்ட் 17ம் தேதி அந்த வீட்டை முற்றுகையிட்டனர்.

அப்போது பாதுகாப்பு படையினர் வீட்டுக்குள் இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டபடி முன்னேறினர். எனவே, சிவராசன் சயனைடு குப்பியைக் கடித்தபடியே நெற்றிப் பொட்டில் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்தார். உடனிருந்த சுபா, கீர்த்தி, நேரு, சுரேஷ் மாஸ்டர் ஆகியோர் சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்தனர்.

இதையடுத்து, ரங்கநாத்திடன் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியானது. பெங்களூர் எம்ஜி ரோட்டிலுள்ள, லாட்ஜுகளுக்கு செல்லும் சிவராசன், அங்கிருந்த எஸ்டிடி பூத்தில் இருந்து ஹரித்துவாரில் இருந்த சந்திராசாமிக்கு போனில் பேசுவார் என ரங்கநாத் தெரிவித்தார்.

அப்படி பேசும்போது, "கொலை வெற்றிகரமாக முடிந்து விட்டது. விரைவில் நேபாளத்துக்கு தப்பி செல்ல வேண்டும். நீங்கள் தான் உதவ வேண்டும்" என சிவராசன் பேசினார் என ரங்கநாத் தெரிவித்துள்ளார்.

ரங்கநாத் தெரிவித்த கருத்துகளை மையமாக வைத்து சயனைடு, மெட்ராஸ் கபே உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளன என்ற போதிலும் ராஜிவ் கொலை வழக்கில் சந்திராசாமி குறித்த மர்மங்கள் விசாரிக்கப்படவில்லை. இத்தகவலை வெளியிட்ட ரங்கநாத் காலமாகிவிட்டார்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மூலக்கதை