எதிர்கட்சி தலைவர்கள் மீது சேற்றை வாரி அடிப்பதா?: சத்ருகன் சின்கா டுவிட்டால் பாஜவில் சர்ச்சை

தமிழ் முரசு  தமிழ் முரசு
எதிர்கட்சி தலைவர்கள் மீது சேற்றை வாரி அடிப்பதா?: சத்ருகன் சின்கா டுவிட்டால் பாஜவில் சர்ச்சை

பாட்னா: எதிர்கட்சி தலைவர்கள் மீது சேற்றை வாரியிறைக்கும் அரசியல் அணுகுமுறையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என பாஜ எம்பி சத்ருகன் சின்கா கருத்தால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. பீகாரில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது நடிகரும் பாஜ எம்பியுமான சத்ருகன் சின்கா பகிரங்கமாக நிதிஷ், லாலு ஆகியோரை சந்தித்து பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இருந்த போதிலும் அவ்வப்போது பாஜவின் செயல்பாடுகளை விமர்சித்து பேசிவரும் சத்ருகன் சின்கா மீது மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்த சூழலில் அண்மையில் லாலு குடும்பத்தினர் மீது பீகார் எதிர்கட்சி தலைவரான சுஷில் குமார் மோடி பல கோடி ரூபாய் முறைகேடு புகார்களை கூறி வருகிறார். இந்த சூழலில் பாஜவின் காலை வாரிவிடும் வகையில் லாலு, கெஜ்ரிவால் ஆகியோருக்கு ஆதரவாக சத்ருகன் மீண்டும் கருத்து கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

சத்ருகன் சின்கா தனது டுவிட்டரில், எதிர்கட்சி தலைவர்கள் மீது சேற்றை வாரியிறைப்பதையும், எதிர்மறையான அணுகுமுறையையும் கைவிட வேண்டும்.

அது கெஜ்ரிவால், லாலு அல்லது சுஷில் மோடியாக இருந்தாலும் சரி. அவர்களுக்கும் இது பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் கெஜ்ரிவால் மீது 2 கோடி லஞ்சம் வாங்கியதாக ஆம் ஆத்மி மாஜி அமைச்சர் கபில் மிஸ்ரா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து சத்ருகன் சின்கா கூறுகையில், வெளிப்படைதன்மை மற்றும் நேர்மையில் பாஜவுக்கு ஆழ்ந்த நம்பிக்கை உள்ளது. அதுதான் நம்மை ஒருங்கிணைக்கிறது.

எனவே ஆதாரமற்ற வெறும் குற்றச்சாட்டுகளை கூற வேண்டியதில்லை என்றும் சத்ருகன் சின்கா பாஜவை குட்டியுள்ளார். இதனால் கடுப்பான பீகார் பாஜ தலைவரான சுஷில் மோடி தனது டுவிட்டரில், லாலு மீதான குற்றச்சாட்டு குறித்து நிதிஷ்குமாரே வாயை மூடி மவுனமாக இருக்கும் போது சத்ருகன் ஏன் அவரை காப்பாற்றுவதற்கு ஓடுகிறார்.

அவர் பெயரான சத்ரு என்பதற்கு பொருத்தமாக கட்சியின் எதிரியாக உள்ளார்.

தொடர்ந்து கட்சிக்கு விரோதமாக செயல்படும் சத்ருகன் சின்காவை நீக்க வேண்டும் என்று அதில் சாடியுள்ளார். தற்போது இந்த விவகாரம் பாஜவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


.

மூலக்கதை