மலாலா மீதான தாக்குதல் ஒரு நாடகம்: பெண் எம்.பி., புகார்

தினமலர்  தினமலர்
மலாலா மீதான தாக்குதல் ஒரு நாடகம்: பெண் எம்.பி., புகார்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், நோபல் பரிசு பெற்ற இளம் பெண் மலாலா மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் ஒரு நாடகம் என இம்ரான் கான் கட்சியை சேர்ந்த பெண் எம்.பி., ஒருவர் குற்றம் சாட்டி உள்ளார்.

பின்னணி என்ன?

பாகிஸ்தானில் கைபர் பக்துன்கவா மாகாணம், ஸ்வாட் மாவட்டத்தில், 1997 ம் ஆண்டு பிறந்தவர் மலாலா. தனது, 12வது வயதில், பெண் குழந்தைகளின் கல்வியை எதிர்க்கும் தலிபான்கள் குறித்து பி.பி.சி., செய்தி ஏஜென்சிக்கு உருது மொழியில் கட்டுரைகள் எழுதினார். 2012ம் ஆண்டு அக்போடரில் வீடு புகுந்து தலிபான் பயங்கரவாதி சுட்டதில் மலாலா தலையில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமடைந்த மலாலா தொடர்ந்து பெண் கல்விக்கு குரல் கொடுத்து வருகிறார். கடந்த, 2014ம் ஆண்டில் அவர் நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டார்.


பாகிஸ்தானில், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் நடத்தி வரும் தெக்ரீக் இ இன்சாப் கட்சியின் பெண் எம்.பி., முஸ்ஸாரத் அகமதுஸீப் சமீபத்தில் ஒரு உருது பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:


தலையில் தோட்டா பாய்ந்ததா?

பி.பி.சி.,க்கு மலாலா கட்டுரைகள் எழுதியதாக கூறியதும், அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதும் அனைத்தும் திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம். மலாலாவின் தலையில் இன்னும் துப்பாக்கி தோட்டா இருக்கிறதாக கூறி வருகின்றனர். ஆனால், எனக்கு சந்தேகமாக இருக்கிறது.

துப்பாக்கி சூடு நடத்த பிறகு ஸ்வாட் நகரில் உள்ள மருத்துவமனையில் மலாலாவை சி.டி., ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்திய போது தலையில் தோட்டா இருக்கவில்லை. ஆனால், பெஷாவர் ராணுவ மருத்துவமனையில் சோதனை நடத்திய போது தலையில் தோட்டா இருப்பதாக கூறப்பட்டது. மலாலாவிற்கு சிகிச்சை அளித்த டாக்டர், மருத்துவ அதிகாரிகளுக்கு அரசு சார்பில் நிலம் வழங்கப்பட்டுள்ளது.

பி.பி.சி., கட்டுரை எழுதியதாக கூறப்பட்ட காலத்தில் மலாலாவுக்கு எழுத, படிக்கவே தெரியாது. மலாலா வீட்டில் மூன்று மாதங்கள் தங்கிய அமெரிக்க நபர் தான் எதிர்காலத்தில் எப்படி செயல்பட வேண்டும் என மலாலாவுக்கு பாடம் எடுத்து உள்ளார்.


இவ்வாறு அவர் கூறினார்.


கட்சி சொல்வது என்ன?

மலாலா மீது தற்போது புகார் கூறியுள்ள பெண் எம்.பி.,யும், ஸ்வாட் மாவட்டத்தை சேர்ந்தவர் தான். இந்த பேட்டி அளித்த பிறகு, இம்ரான் கான் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஸ்வாப்கட் முகமது, அந்த பெண் எம்.பி.,க்கும் தங்கள் கட்சிக்கும் தற்போது எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.






மூலக்கதை