ஓட்டு இயந்திர சர்ச்சை எதிரொலி 3 மாநிலங்களில் ராஜ்யசபா தேர்தல் தள்ளி வைப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஓட்டு இயந்திர சர்ச்சை எதிரொலி 3 மாநிலங்களில் ராஜ்யசபா தேர்தல் தள்ளி வைப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: ஓட்டு இயந்திர சர்ச்சை எதிரொலியாக ராஜ்யசபா தேர்தல்களை தேர்தல் ஆணையம் தள்ளி வைத்துள்ளது. மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு வேலைகள் செய்துதான் உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் பாஜ வெற்றி பெற்றது என கெஜ்ரிவால், மாயாவதி உள்ளிட்டோர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதையடுத்து நாடு முழுவதும் உள்ள தேசிய கட்சிகள் ஓட்டு இயந்திரத்திற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர்.

இதையடுத்து டெல்லியில் ஓட்டு இயந்திரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி அது பாதுகாப்பானதுதான் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. இருந்த போதிலும் ஓட்டு இயந்திரத்தில் தில்லுமுல்லு வேலைகள் செய்ய முடியும் என தொடர்ந்து ஆம் ஆத்மி வலியுறுத்தி வருகிறது.

இ தையடுத்து ஓட்டு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய முடியுமா என்பதை நிரூபித்து காட்ட ஜூன் 3 வரை அரசியல் கட்சிகளுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் வருகிற ஜூலையில் ஜனாதிபதி தேர்தல் வர உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

இந்த சூழலில் மேற்கு வங்கம், குஜராத், கோவா ஆகிய மாநிலங்களில் ராஜ்யசபா தேர்தல் நடைபெற இருந்தது.

இதுகுறித்து நேற்று தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனாதிபதி தேர்தல் பணிகள் காரணமாகவும், ஓட்டு இயந்திர சர்ச்சைகள் காரணமாகவும் ராஜ்யசபாவுக்கான 10 எம்பிகளுக்கான தேர்தல் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது என்று அறிவித்துள்ளது.

.

மூலக்கதை