காந்தியை கொன்ற கோட்சேவுக்கு விழா பங்கேற்க வந்த சாமியாருக்கு சரமாரி அடி: டெல்லியில் பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
காந்தியை கொன்ற கோட்சேவுக்கு விழா பங்கேற்க வந்த சாமியாருக்கு சரமாரி அடி: டெல்லியில் பரபரப்பு

புதுடெல்லி: காந்தியை சுட்டு கொன்ற கோட்சேவுக்கு நடத்த முயன்ற விழாவில் பங்கேற்க வந்த சாமியாருக்கு சரமாரியாக அடி உதை விழுந்தது. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே துப்பாக்கியால் சுட்டு கொன்றான்.

இது நாட்டு மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் ஒரு தரப்பினர் கோட்சேவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில் டெல்லியில் கோட்சேவின் பிறந்த நாள் விழாவுக்கு இந்து அமைப்புகள் சில ஏற்பாடு செய்திருந்தன. இதில் பங்கேற்க சாமியார் சுவாமி ஓம் என்பவர் வந்தார்.

இவர் பிரபலமான டிவி நிகழ்ச்சியான பிக் பாஸ் போன்றவற்றில் பங்கேற்று பெண்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர். இதனால் இவர் பெண்கள் அமைப்பினரின் கண்டனத்திற்கும் ஆளானவர்.



இந்நிலையில் கோட்சே விழாவுக்கு வந்த சுவாமி ஓமை கண்டித்து பெண் ஒருவர் கோஷம் எழுப்பினார். நடிகை ஒருவரை அரை நிர்வாணமாக யோகா பயிற்சி அளிக்க சுவாமி ஓம் முயற்சி செய்தார் என குற்றம் சாட்டினார்.

இதையடுத்து கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அந்த பெண்ணுடன் சேர்ந்து மேலும் சிலர் சுவாமி ஓமை எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர்.

இதனால் விழா ஏற்பாட்டாளர்களுடன் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சிலர் சுவாமி ஓமை சரமாரியாக அடித்து உதைத்தனர்.

அவரை அழைத்து வந்த பாதுகாவலர்கள் அவரை சுற்றி வளைத்து பாதுகாப்பாக அங்கிருந்து மீட்டு சென்றனர்.

இந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

.

மூலக்கதை