ப.மிளகாய் விலை 'கிடுகிடு'

தினமலர்  தினமலர்
ப.மிளகாய் விலை கிடுகிடு

பெங்களூரு: வரத்து குறைவால் பச்சை மிளகாய் விலை அதிகரித்துள்ளது. கர்நாடகா உட்பட, எந்த மாநிலத்திலும், பச்சை மிளகாய் விளைச்சல் திருப்திகரமாக இல்லை. மாநிலத்தின் சிக்கபல்லாபூர், கோலார் மாவட்டங்களில், பச்சை மிளகாய் பெருமளவில் விளையும். ஆனால், இம்முறை விளைச்சல் இல்லை. ஹாசன், மாண்டியா மாவட்டங்களில், 30 சதவீதமே விளைந்துள்ளது. ஹாவேரி, ராணிபென்னுார், தாவணகரே, தார்வாட் மாவட்டங்களில், வெப்பத்தின் தாக்கத்தால், நோய் தாக்கியதில் பாழாகி, 10 சதவீதம் கூட விளைச்சல் கிடைக்கவில்லை. பெலகாவி உட்பட, சில மாவட்டங்களில், சிறிதளவு விளைச்சல் கண்டுள்ளது. இது, அந்தந்த மாவட்டங்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. இதனால், கடந்த மாதம், பச்சை மிளகாய் மொத்த விலையில், கிலோ, 20 - 30 ரூபாய் வரை இருந்தது. தற்போது, 40 - 50 ரூபாய் வரை, இருமடங்காக அதிகரித்துள்ளது. சில்லரையில், 40 - 50 ரூபாயாக இருந்தது, தற்போது, 70 - 75 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இன்னும் இரு வாரங்களில், விலை மேலும் அதிகமாகும் வாய்ப்புள்ளது.

மூலக்கதை