சீனு ராமசாமி - யுவன் - விஜய் சேதுபதி கூட்டணியில் 'மாமனிதன்'

தினமலர்  தினமலர்
சீனு ராமசாமி  யுவன்  விஜய் சேதுபதி கூட்டணியில் மாமனிதன்

தமிழ்த் திரையுலகில் இன்றைக்கு நடிக்கத் தெரிந்த நடிகர்களில் யதார்த்தமாக நடிக்கக் கூடியவர் எனப் பெயர் வாங்கியிருப்பவர் விஜய் சேதுபதி. சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி, சீனு ராமசாமி இயக்கிய 'தென் மேற்குப் பருவக்காற்று' படம் மூலமாக நாயகனாக உயர்ந்தார். இப்படத்திற்கு சில தேசிய விருதுகளும் கிடைத்ததால் இந்தப் படம் அப்போது அதிகம் கவனிக்கப்பட்ட படங்களில் ஒன்றாக அமைந்தது. அதன் பின் நல்ல படங்களில் நடித்த விஜய் சேதுபதி தன்னையும் நிலைநிறுத்திக் கொண்டார்.

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி மீண்டும் நடித்த 'இடம் பொருள் ஏவல்' படம் முற்றிலுமாக முடிந்தும், இரண்டு வருடங்களுக்கும் மேலாக வெளிவராமல் இருக்கிறது. இப்படம் எப்போது வெளிவரும் என்று படத்தைத் தயாரித்த இயக்குனர் லிங்குசாமி தான் அறிவிக்க வேண்டும். இந்தப் படம் வெளிவராமல் தாமதமாவதால் மீண்டும் சீனு ராமசாமியின் இயக்கத்தில் நடிக்க முடிவெடுத்த விஜய் சேதுபதி 'தர்மதுரை' படத்தில் நடித்தார். கடந்த வருடம் வெளிவந்த இந்தப் படம் நல்லதொரு படமாக அமைந்தது. இப்படத்தின் மூலமும் விஜய் சேதுபதிக்கும் நல்ல பெயர் கிடைத்தது.

அடுத்து நான்காவது முறையாக சீனு ராமசாமியுடன் இணைய உள்ளார் விஜய் சேதுபதி. இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா தயாரிக்க உள்ள இந்தப் படத்திற்கு இசையமைக்க இளையராஜாவின் அனுமதிக்காகக் காத்திருக்கிறார்கள். கதை விவாதம் முடிந்துள்ள இப்படத்திற்கு 'மாமனிதன்' எனப் பெயரிட உள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ள நிலையில் மற்ற விவரங்களை விரைவில் எதிர்பார்க்கலாம்.

1995ம் ஆண்டு இதே 'மாமனிதன்' என்ற பெயரில் நெப்போலியன், வினிதா நடித்த படம் ஒன்று வெளியாகியுள்ளது.

மூலக்கதை