அதிக விலைக்கு டிக்கெட் விற்க சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள் - தியேட்டர் உரிமையாளர்கள்

தினமலர்  தினமலர்
அதிக விலைக்கு டிக்கெட் விற்க சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள்  தியேட்டர் உரிமையாளர்கள்

அதிக விலைக்கு டிக்கெட் விற்க சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள் என தியேட்டர் உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் விஷால் தனிச்சையாக முடிவு எடுப்பதற்கும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சென்னை தேனாம்பேட்டையில் காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு திரையரங்க உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் பி.கண்ணப்பன்...

இனி எம்ஜி முறையில் படத்தை திரையிடப்போவது கிடையாது. விகிதார அடிப்படையில் தான் படத்தை திரையிடுவோம். கடந்த 11 ஆண்டுகளாக தியேட்டர் நுழைவுக்கட்டணம் உயர்த்தப்படவில்லை, மின் கட்டணம், ஊழியர்கள் சம்பளம், பராமரிப்பு செலவு போன்றவைகள் எல்லாம் அதிகமாகிவிட்டன. ஆகவே நுழைவுக்கட்டணத்தை உயர்த்தி தர வேண்டும்.

விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்களிடம் படத்தை குறைந்த விலைக்கு வாங்காமல், எங்களிடம் தியேட்டர் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி விற்கும்படி கட்டாயப்படுத்துகிறார்கள். இதனால் பொதுமக்களிடம் எங்களுக்கு தான் கெட்ட பெயர் ஏற்படுகிறது. தியேட்டர் டிக்கெட் விலையில் ஜிஎஸ்டி., வரி 28 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது.

ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்கும்போது ரூ.30 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை தடுக்கும் பொருட்டு தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் இணையதளம் துவங்கப்பட்டு, அதன்மூலம் டிக்கெட் புக் செய்ய ரூ.10 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என்று விஷால் அறிவித்துள்ளார். எதையும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று எல்லாவற்றையும் செய்கிறார் விஷால், திரையரங்கு கட்டணம் குறித்து எங்களை கலந்தாலோசிக்காமல் நடிகர் விஷால் தனிச்சையாக முடிவு எடுத்திருக்கிறார், இது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு கண்ணப்பன் கூறினார்.

மூலக்கதை