10 கோடி நஷ்ட ஈடு கேட்டு கெஜ்ரிவால் மீது மேலும் ஒரு வழக்கு: ஜெட்லி தாக்கல் செய்தார்

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: கெஜ்ரிவாலுக்கு எதிராக மேலும் ஒரு அவதூறு வழக்கை மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார்.மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்த போது நிதி முறைகேடுகள் நடைபெற்றதாக கெஜ்ரிவால்  உள்ளிட்ட ஆம் ஆத்மி தலைவர்கள் 5 பேர் குற்றம் சாட்டினர். இதையடுத்து அவர்கள் மீது ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு அவதூறு வழக்கை  ஜெட்லி தொடர்ந்தார். இந்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக மூத்த வக்கீல் ராம் ஜெத்மலானி ஆஜராகி வாதாடி வருகிறார். இந்த வழக்கில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற விசாரணையின் போது ஜெட்லி ஆஜரானார். அவரை ராம் ஜெத்மலானி குறுக்கு  விசாரணை செய்தார். அப்போது டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் குறித்து தான் எழுதிய கட்டுரையை ஜெட்லி மிரட்டல் காரணமாக  பத்திரிக்கை ஒன்று வெளியிட மறுத்துவிட்டது என ராம் ஜெத்மலானி நேரடியாக குற்றம் சாட்டினார். உடனே இப்படி கெஜ்ரிவால் உங்களை  கேட்கச் சொன்னாரா என ஜெட்லி, ஆமாம் என ராம் ஜெத்மலானி பதிலடி கொடுக்க ஒரே காரசாரமாக ஆனது.இதையடுத்து ஜெட்லி எந்த வகையிலும் நற்பெயருக்கு உரியவர் கிடையாது, அவருக்கு மான நஷ்ட வழக்கு தொடர அருகதை கிடையாது  என்று ஜெட்லி வாதிட்டார். வழக்கு ஜூலை 28ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.நீதிமன்றத்தில் ஜெட்லியை அவமதித்து பேசிய ராம்ஜெத்மலானிக்கு பாஜ தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த சூழலில்  தன்னை அவமதித்து பேசியதை கண்டித்து கெஜ்ரிவாலுக்கு எதிராக மேலும் ஒரு அவதூறு வழக்கை ஜெட்லி தாக்கல் செய்துள்ளார். இதில் கெஜ்ரிவாலின் வக்கீல் ராம் ஜெத்மலானி தன்னை கிரிமினல் என்று நேரடியாக அவமதித்துள்ளார். எனவே ரூ.10 கோடி நஷ்ட ஈடாக  தர வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த மனுவின் மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் நாளைக்கு விசாரணைக்கு  எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை