விமானங்களில் இணையதள சேவை: விரைவில் அனுமதி வழங்க மத்திய அரசு முடிவு

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: விமானத்தில் இணையதள சேவை வழங்க மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை முடிவு செய்துள்ளது. விமானங்களில் பயணம் செய்வோர் இணையதள வசதியைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், இன்டர்நெட் சேவை வழங்குவதற்கான ஒப்புதலை மத்திய அரசு விரைவில் வழங்க உள்ளது. மத்திய தொலை தொடர்புத்துறையின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும், ஆகஸ்ட் மாத இறுதியில் ஒப்புதல் கிடைக்கக்கூடும் என்றும் டெல்லியில் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை தலைமை இயக்குநர் லலித் குப்தா தெரிவித்துள்ளார்.இந்திய வான் எல்லையில் பாதுகாப்பு காரணங்களுக்காக வைஃபை இன்டர்நெட் சேவை கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், அதனை அளிப்பது தொடர்பாக சர்வதேச விமான நிறுவனங்களுடன் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் பேச்சு நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் செயல்படும் ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்கள், வைஃபை இணைப்புடன் கூடிய போயிங் விமானங்களை அடுத்த ஆண்டு மத்தியில் வாங்கத் தயார்நிலையில் இருப்பதாகவும் குப்தா தெரிவித்தார்.உலகளவில் லுப்தான்சா, ஏர் பிரான்ஸ், பிரிட்டிஷ் ஏர்வேஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட 70 விமான நிறுவனங்கள் தங்கள் பயணிகளுக்கு மின்னஞ்சல், லைவ்-ஸ்ட்ரீம், சமூக வலைதள பயன்பாட்டுடன் போன் அழைப்புகளை மேற்கொள்வதற்கும் தயாராக உள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் விமானப் பயணிகளுக்கு இன்டர்நெட் சேவை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை