ஆகஸ்ட் மாதம் முதல் இந்திய விமானங்களில் இன்டர்நெட் சேவை: மத்திய அரசு தகவல்

தினகரன்  தினகரன்

டெல்லி: விமானங்களில் பயணம் செய்வோர் இணையதள வசதியைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், இன்டர்நெட் சேவை வழங்குவதற்கான ஒப்புதலை மத்திய அரசு விரைவில் வழங்க உள்ளது. இதுகுறித்து சிவில் விமானப் போக்குவரத்துத் துறை தலைமை இயக்குநர் லலித் குப்தா கூறியுள்ளதாவது: இந்தியாவில் விரைவில் விமானங்களில் இன்டர்நெட் சேவை வழங்கப்பட உள்ளது.  மத்திய தொலைத்தொடர்புத்துறையின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். ஆகஸ்ட் மாத இறுதியில் ஒப்புதல் கிடைக்கக்கூடும். இவ்வாறு அவர் கூறினார். மேலும் இந்திய வான்எல்லையில் பாதுகாப்பு காரணங்களுக்காக வை-பை  இன்டர்நெட் சேவை கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், அதனை அளிப்பது தொடர்பாக சர்வதேச விமான நிறுவனங்களுடன் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் பேச்சு நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் செயல்படும் ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்கள், வை-பை இணைப்புடன் கூடிய போயிங் விமானங்களை அடுத்த ஆண்டு மத்தியில் வாங்கத் தயார்நிலையில் இருப்பதாகவும் குப்தா தெரிவித்தார்.உலக அளவில் லுப்தான்சா, ஏர் பிரான்ஸ், பிரிட்டிஷ் ஏர்வேஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட 70 விமான நிறுவனங்கள் தங்கள் பயணிகளுக்கு மின்னஞ்சல், லைவ்-ஸ்டிரீம், சமூக வலைதள பயன்பாட்டுடன் போன் அழைப்புகளை மேற்கொள்வதற்கும் தயாராக உள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் விமான பயணிகளுக்கு இன்டர்நெட் சேவை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை