உ.பி.யில் தீண்டாமை காரணமாக புத்த மதத்திற்கு மாறிய 180 தலித் குடும்பங்கள்

தினகரன்  தினகரன்

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில், தீண்டாமைக் கொடுமையின் காரணமாக, ஒரே ஊரைச் சேர்ந்த 180 தலித் குடும்பங்கள் புத்த மதத்துக்கு மாறியுள்ளன. லக்னோவிலுள்ள சஹரன்பூர் என்ற கிராமத்தில் தலித் மக்களுக்கு எதிராக தீண்டாமை சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இதனால் இந்தக் கிராமத்தில் வாழும் தலித் மக்கள், தங்களுக்குப் பாதுகாப்பு என்பதே இல்லை எனக் கூறி, புத்த மதத்துக்கு மாறியுள்ளனர். மேலும், தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்துக் கேள்வி கேட்கும் தலித் மக்கள் இயக்கமான ‘பீம் சேனை’யின் தலைவர் சந்திரசேகர் ஆசாத்மீது போலீஸார் தாக்குதலில் ஈடுபடுவதாகவும் அந்தக் கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் தேவையில்லாத வதந்திகளைப் பரப்புவதாக கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிந்துவருகின்றனர். இதுவரை 14 வழக்குகளின் கீழ் 36 பேர் சமீபத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதனால் அக்கிராமத்தை சேர்ந்த 180 தலித் குடும்பங்கள் புத்த மதத்துக்கு மாறியுள்ளனர். மேலும் மதம் மாறப்போவதையும் அதற்கான காரணம் குறித்தும் அக்குடும்பங்கள் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து சஹரன்பூரின் சிறப்பு போலீஸ் அதிகாரி கூறுகையில், இதுபோன்ற எந்தத் தகவலும் எங்களுக்கு வரவில்லை. மேலும், மதம் என்பது ஒருவருடைய தனிப்பட்ட விருப்பம். மதத்தைக் காரணமாகக்கொண்டு யாரும் குற்றச்செயலில் ஈடுபட்டு தண்டனையில் இருந்து தப்ப முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை