உருவ பொம்மை எரிப்பு : ரஜினி வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு

தினமலர்  தினமலர்
உருவ பொம்மை எரிப்பு : ரஜினி வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு

ரஜினி அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக முன்னேற்ற படையினர் கைது செய்யப்பட்டனர். மேலும் ரஜினி வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னையில், நடிகர் ரஜினிகாந்த், தன் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சியை, 5 நாட்கள் நடத்தினர். இதில் பேசிய ரஜினி, அரசியலில் ஈடுபட போவதாக மறைமுகமாக கூறினார். இதற்கு பலர் ஆதரவும், பலர் எதிர்ப்பும் தெரிவித்தனர்.

போலீஸ் பாதுகாப்பு : இந்நிலையில் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் தமிழக அரசியலில் ஈடுபட எதிர்ப்பு தெரிவித்து, தமிழர் முன்னேற்றப் படையினர், இன்று காலை, 11.30 மணிக்கு ரஜினியின் வீடு முன்பு போராட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது. இதையடுத்து, சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினியின் வீட்டிற்கு காலை முதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

உருவ பொம்மை எரிப்பு : சொன்னபடியே, தமிழக முன்னேற்ற படையை சேர்ந்த வீரலெட்சுமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர், ரஜினி வீட்டிற்கு செல்லும் வழியில் கத்ட்ரீல் சாலை அருகே திடீரென அவரது உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்திலும், அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார், வீரலெட்சுமி உள்ளிட்ட தமிழக முன்னேற்ற படையை சேர்ந்தவர்களை கைது செய்தனர்.

ரசிகர்களுடன் ரஜினி சந்திப்பு : இதனிடையே கடந்த 5 நாட்களாக பல்வேறு மாவட்ட ரசிகர்களை சந்தித்து வந்த ரஜினி, விடுபட்ட 200 பேரை ராகவேந்திரா மண்டபத்தில் இன்று சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டார்.

மூலக்கதை