டிடிவி தினகரன் மற்றும் மல்லிகார்ஜூனாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: டிடிவி தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூன் ஜாமீன் மனு மீதான விசாரணை 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜாமீன் மனு மீதான விசாரணையை டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இரட்டை இலை சின்ன விவகாரத்தில் கைதான இருவரும் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். தினகரன் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கையை ஏற்று டெல்லி நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்துள்ளது.  இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுப்பதற்கு அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேரம் பேசியதாக புகார்கள் எழுந்தன. டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கடந்த மாதம் 16-ம் தேதி போலீசாரிடம் பிடிபட்ட இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம் இந்த தகவல் வெளியானது. மேலும் சுகேசிடம் இருந்து 1.30 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.சுகேஷ் கொடுத்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து டிடிவி தினகரனையும், அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவையும் கடந்த மாதம் 25-ம் தேதி டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். லஞ்சப் பணத்தை பரிமாற்றம் செய்ய ஹவாலா தரகராக செயல்பட்ட நரேஷ் என்பவரையும் கடந்த 28-ம் தேதி டெல்லி போலீஸார் கைது செய்தனர். அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரின் போலீஸ் காவல் முடிந்த நிலையில் டெல்லி தீஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்றத்தில் டிடிவி தினகரன், மல்லிகார்ஜுனா ஆஜர்படுததப்பட்டனர். அப்போது இருவரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து இருவரும் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர். மே 15-ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்கள் காவல் மே 29-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அவர்களது காவல் வரும் 29-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் புதன்கிழமை ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் டிடிவி தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூன் ஜாமீன் மனு மீதான விசாரணை 26ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மூலக்கதை