ஐந்து நாள் இடைவெளியில் 2 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ள இந்திய பெண்

தினகரன்  தினகரன்

அருணாச்சல பிரதேசம்: உலகின் மிக உயரமான சிகரமாக கருதப்படும் இமைய மலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் 5 நாட்களில் 2 முறை ஏறிய முதல் பெண் என்ற பெருமையை இந்தியர் ஒருவர் பெற்றுள்ளார். அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த அன்ஷூ ஜம்சென்பா என்ற 32 வயதான பெண், இரண்டு குழந்தைகளுக்குத் தாய் ஆவார். இவர் மலையேற்ற வரலாற்றில் இதுவரை இரண்டு உலக சாதனைகளைச் படைத்துள்ளார். முதலில் எவரெஸ்ட் சிகரத்தில் 5 முறை ஏறிய முதல் பெண் என்ற சாதனையைச் படைத்தார். தற்போது 5 நாள் இடைவெளியில் 2 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண் என்ற புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார். அன்ஷூ கடந்த 2011-ம் ஆண்டு இதே போல் 10 நாள் இடைவெளியில் 2 முறை எவரஸ்ட் சிகரத்தில் ஏறி இந்திய தேசியக் கொடியைப் பறக்கவிட்டார். பல ஆண்டுகள் கடும் பயிற்சிக்குப் பிறகு, ஐந்து நாட்களுக்குள் இரண்டு முறை எவரெஸ்டின் 17,500 அடி உச்சத்தை அடைந்து சாதனை படைத்துள்ளார் அன்ஷு. இதற்கு முன்னர், நேபாளத்தைச் சேர்ந்த சரும் ஷெர்பா என்ற பெண், 7 நாட்களில் இரண்டு முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியதுதான் அதிகபட்ச சாதனையாக இருந்தது. அவரின் சாதனையை இந்தியப் பெண் அன்ஷு தற்போது முறியடித்துள்ளார். எவரஸ்ட் சிகரத்தில் ஏற முயற்சி செய்பவர்கள் பலத்த பனிக்காற்று, பனிச்சரிவு, கடுங்குளிர் போன்ற சவால்களை எதிர்கொண்டு வெற்றிகரமாக அவற்றை சாமாளிக்க வேண்டும் என்று சாதனை பெண் அன்ஷூ கூறியுள்ளார்.

மூலக்கதை