ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது: லக்னோவில் இன்று முதல் அமல்

தினகரன்  தினகரன்

லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஹெல்மெட் அணியாத டூவீலர் ஓட்டுநர்களுக்கு பெட்ரோல் கிடையாது என்ற உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு கடந்த வாரம் இந்த உத்தரவை பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவை சிறப்பாக நடைமுறைப்படுத்தும் விதமாக லக்னோ போலீசார் பெட்ரோல் நிலையங்களுக்கு சென்று அங்குள்ள ஊழியர்களுக்கு கடந்த 3 நாட்களாக பயிற்சி அளித்து வந்தனர். ஹெல்மெட் அணிந்தாக வேண்டிய கட்டாயத்தை டூவீலர் ஓட்டுநர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் லக்னோ போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இதனை முறைப்படி செயல்படுத்தும் வகையில் போலீசார் பெட்ரோல் நிலைய ஊழியர்களுக்கு பயிற்சியும் அளித்துள்ளனர். இந்த உத்தரவை, “No Rule, No Fuel” என்னும் முழக்கத்துடன் போலீசார் செயல்படுத்த இருக்கின்றனர். இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது. ”No helmet, No fuel” என்னும் இதே முறையிலான நடவடிக்கை, கடந்த வருடம் மஹாராஷ்ட்ராவில் அறிமுகப்படுத்தப்பட்டு, எதிர்ப்புகள் எழுந்ததன் காரணமாக கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல் கேரளாவிலுள்ள திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு ஆகிய 3 நகரங்களில் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல், ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் வழங்கப்பட மாட்டாது என கேரள அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை