21 கோடி செலவில் ஹவுரா ரயில் நிலையத்தில் சோலார் மேற்கூரை திட்டம்

தினகரன்  தினகரன்

கொல்கத்தா: கொல்கத்தாவின் ஹவுரா ரயில் நிலைய மேற்கூரைகளில் 21 கோடி செலவில் சோலார் மின்தகடுகள் பொருத்தப்பட உள்ளன.நாடு முழுவதும் அரசு கட்டிடங்களில் மின்தேவையை பூர்த்தி செய்ய, சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் சோலார் மின்தகடுகளை பொருத்த மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதற்காக மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாட்டின் மிகப்பெரிய ரயில் நிலையமான, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் ஹவுரா ரயில் நிலையத்திலும் சோலார் மின்தகடு பொருத்தும் பணிகள் விரைவில் நடக்க உள்ளன. இங்கு மொத்தம் 23 பிளாட்பாரங்கள் உள்ளன. இதில், 14 பிளாட்பாரங்களின் மேற்கூரைகளில் 21 கோடி செலவில் சோலார் மின்தகடுகள் பொருத்தப்பட உள்ளது. இப்பணியை மேற்கொள்ளும் தனியார் மரபுசாரா எரிசக்தி நிறுவனத்தின் இயக்குனர் ராகுல் குப்தா கூறுகையில், ‘‘சோலார் மேற்கூரை திட்டத்தின் மூலம் 3 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இந்த மின்சாரம் யூனிட் 5.49 என்ற விலையில் கிழக்கு ரயில்வேக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கு விற்பனை செய்வோம். சோலார் மூலம் கிடைக்கும் மின்சாரம் ஹவுரா ரயில் நிலையத்தின் 50 முதல் 60 சதவீத மின்தேவையை பூர்த்தி செய்யும். எனவே, இத்திட்டம் ஹவுரா ரயில் நிலையத்தின் மின்செலவை பெருமளவில் குறைக்கும். இத்திட்டமே, நாட்டின் மிகப்பெரிய சோலார் மேற்கூரை திட்டமுமாகும்’ என்றார். நிதி தொடர்பான சில பேச்சுவார்த்தைகள் முடிவானதும், அடுத்த 3 மாதத்தில் இத்திட்டம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.தண்டவாள சுத்தத்துக்கும் தரவரிசைசுத்தமான இந்தியாவை நோக்கி மத்திய அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாக, சுத்தமான ரயில் திட்டத்தை ரயில்வே மேற்கொண்டு வருகிறது. இதனடிப்படையில் தூய்மையான ரயில் நிலையங்கள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதேபோல, சுத்தமான தண்டவாளங்களையும் பட்டியலிட ரயில்வே முடிவு செய்துள்ளது.

மூலக்கதை