நாடாளுமன்ற குழுவிடம் பதில் தேர்தல் செலவை அரசே ஏற்கும் திட்டத்துக்கு ஆணையம் எதிர்ப்பு

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: ‘‘வேட்பாளர்களின் தேர்தல் செலவை அரசே ஏற்பதற்கு ஆதரவு தர முடியாது’’ என நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. தேர்தல் சீர்த்திருத்தம் குறித்து, தேர்தல் ஆணைய அதிகாரிகள், சட்டம் மற்றும் நீதித்துறை நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் கடந்த 19ம் தேதி ஆலோசனை நடத்தினர். அப்போது, வேட்பாளர்களின் தேர்தல் செலவை அரசே ஏற்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் கருத்தை தெரிவிக்குமாறு நாடாளுமன்ற நிலைக்குழு வலியுறுத்தியது.இதைத்தொடர்ந்து, தேர்தல் ஆணையம், நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு எழுத்துப்பூர்வமாக நேற்று பதிலளித்தது. அதில் கூறியிருப்பதாவது:வேட்பாளர்களின் தேர்தல் செலவை அரசே ஏற்பதற்கு ஆதரவு தர முடியாது. இந்த முறையால், அரசு அளிக்கும் தொகையை விட அதிகமாக, வேட்பாளர் தனது சொந்த பணத்தையோ, வேறொருவரின் பணத்தையோ செலவிடுவதை தடுக்கவோ, கண்டுபிடிக்கவோ முடியாது. இந்த விவகாரத்தில் உண்மையான பிரச்னையை தீர்க்க வேண்டும் என்பதே தேர்தல் ஆணையத்தின் விருப்பமாகும்.அதற்கு, அரசியல் கட்சிகள் பெறும் நிதி, அவற்றை எவ்வாறு செலவிட்டன உள்ளிட்டவற்றில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வர தீவிர சீர்த்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. தேர்தலில் அதிகளவில் பணம் செலவழிக்கப்படுவதை தடுக்கவும், கருப்பு பண பயன்பாட்டை ஒழிக்கவும் தேர்தலில் வேட்பாளர்களின் செலவை அரசே ஏற்க வேண்டுமென்ற விவாதம் நீண்டகாலமாக இருந்து வருகிறது. இதற்கு தேர்தல் ஆணையம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை