சொத்து கணக்குகளை 1856 ஐஏஎஸ் அதிகாரிகள் தாக்கல் செய்யவில்லை

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: நாடு முழுவதும் 1856 ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களுடைய அசையா சொத்து கணக்கை இதுவரை தாக்கல் செய்யவில்லை என மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாத கடைசியில் ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களது அசையா சொத்து கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பது விதிமுறையாகும். மேலும் ரூ.5 ஆயிரத்துக்கு அதிகமான மதிப்புள்ள பரிசு பொருட்களை ஏற்பதற்கு முன் அரசிடம் அனுமதி பெற வேண்டும். அதேபோல் தனது நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் இருந்து 25 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக பரிசு பொருட்களை பெற்றால் அரசுக்கு தெரியப்படுத்தவேண்டியதும் அவசியம். இந்நிலையில் நாடு முழுவதும் 1856 ஐஏஎஸ் அதிகாரிகள் 2016ம் ஆண்டுக்கான தங்களது அசையா சொத்து கணக்கு குறித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யவில்லை என பணியாளர் மற்றும் பயிற்சி துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 255 ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களது அசையா சொத்து கணக்கு விவரத்தை இதுவரை தாக்கல் செய்யவில்லை. இதேபோல் ராஜஸ்தான் மாநிலத்தில் 153, மத்தியப் பிரதேசத்தில் 118, மேற்கு வங்கத்தில் 109, அருணாச்சலப் பிரதேசம், கோவா மற்றும் மிசோரத்தில் மொத்தம் 104 அதிகாரிகள் சொத்து கணக்கை தாக்கல் செய்யவில்லை. கர்நாடகாவில் 82, ஆந்திராவில் 81, பீகார் 74, ஒடிசா, அசாம், மற்றும் மேகாலயாவில் தலா 72, பஞ்சாப் 70, மகாராஷ்டிரா 67, மணிப்பூர்-திரிபுரா 64, இமாச்சலில் 60 அதிகாரிகள் அறிக்கையை சமர்பிக்கவில்லை. இதேபோல் குஜராத்தில் 56, ஜார்க்கண்ட்டில் 55, அரியானாவில் 52, ஜம்மு மற்றும் காஷ்மீரில் 51, தமிழகத்தில் 50, நாகாலாந்தில் 43, கேரளா 38, உத்தராஞ்சல் 33 சிக்கிம் 29 தெலங்கானாவில் 26 ஐஏஎஸ் அதிகாரிகளும் இதுவரை அறிக்கை தாக்கல் செய்யவில்லை. நாடு முழுவதும் மொத்தம் 5,004 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை