பாஜ எம்.பி. தாக்கல் செய்த மசோதா பள்ளிகளில் கட்டாய பகவத் கீதை

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: பகவத் கீதையை பள்ளியில் கட்டாயமாக்கப்பட வேண்டும் என பா.ஜ எம்.பி ரமேஷ் பிதூரி கொண்டு வந்த தனிநபர் மசோதா நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடரில் விவாதத்துக்கு வரலாம் எனத் தெரிகிறது. பா.ஜ மக்களவை எம்.பி ரமேஷ் பிதூரி. இவர் கடந்த மார்ச் மாதம் தனிநபர் மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘‘சிறுபான்மையினர் பள்ளிகள் தவிர மற்ற பள்ளிகளில் நல்லொழுக்க பாடமாக பகவத் கீதை கற்பிப்பதை கட்டாயமாக்க வேண்டும். அதில் உள்ள உயர்ந்த சிந்தனைகள் மற்றும் போதனைகள், இளைஞர் சமுதாயத்தை சிறந்த குடிமக்களாக்கும். இதன் போதனைகளை விவேகானந்தர், ஸ்ரீஅரபிந்தர் மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்றோர் விளக்கியுள்ளனர். இந்த சட்டத்ைத அமல்படுத்த 5 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும். இதற்கு ஒப்புக்கொள்ளாத பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்’’ என கூறியிருந்தார். இதுகுறித்து மக்களவை செய்தி குறிப்பில் வெளியிடப்பட்ட தகவலில், ‘‘இந்த மசோதா குறித்து ஜனாதிபதிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின் 117வது விதிமுறையின் கீழ் இது குறித்து விவாதிக்கலாம் என ஜனாதிபதி பரிந்துரை செய்துள்ளார்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் அடுத்த கூட்டத் தொடரில் விவாதத்துக்கு வரலாம் எனத் தெரிகிறது.

மூலக்கதை