ரான்சம்வேர் வைரசுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை: வடகொரியா மறுப்பு

தினமலர்  தினமலர்
ரான்சம்வேர் வைரசுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை: வடகொரியா மறுப்பு

பியாங்யங்: கம்ப்யூட்டர்களை ஹேக் செய்யும் ரான்சம்வேர் வைரசிற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என வடகொரியா மறுப்பு தெரிவித்துள்ளது.
ரான்சம்வேர் வைரசால் இதுவரை 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான கம்யூட்டர்கள் முடக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகள், ரயில்வே, தொழிற்சாலை, கோயில் நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் இணையதளங்கள் முடக்கப்பட்டு, செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இணைய உலகை பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ள இந்த வைரஸானது வடகொரியா மூலம் உருவாக்கப்பட்டதற்கான பல குறியீடுகள் காணப்படுவதாக பிரபல ஆண்டி வைரஸ் நிறுவனங்கள் தெரிவித்திருந்தன. லாசரஸ் குரூப் எனப்படும் பிரபல சைபர் கிரைம் குழு கடந்த 2014ம் ஆண்டு சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் கம்ப்யூட்டர்களையும்,2016ம் வங்கதேசத்தை சேர்ந்த வங்கிகளின் கம்யூட்டர்களையும் ஹேக் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தென்கொரியாவுக்கு எதிராக தொடர்ந்து இயங்கிவரும் இந்த சைபர் கிரைம் குழு வடகொரியாவால் உருவாக்கப்பட்டது என்று கடந்த சில ஆண்டுகளாகவே குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்த லாசரஸ் குரூப் உருவாக்கிய வைரஸ்களின் தரவுகளும் தற்போது பரவிவரும் ரான்சம்வேர் வைரஸின் தரவுகளும் ஒன்று போலவே இருப்பதாக கணினி வல்லுநர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் வடகொரியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், உலகில் எங்கு எந்த பிரச்சனை நடந்தாலும் வடகொரியாவை குற்றவாளி ஆக்க பார்ப்பது மிகவும் கேலிக்குறியதாக உள்ளது என ஐக்கிய நாடுகளுக்கான வடகொரியாவின் துணைத்தூதர் கிம் இங் ரியோன் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை