ஈரான் அதிபர் தேர்தலில் ரவுஹானி அபார வெற்றி

தினமலர்  தினமலர்

டெஹ்ரான், ஈரான் அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபரும், மிதவாதியுமான ஹசன் ரவுஹானி, 68, மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

மேற்காசிய நாடான ஈரானில், பழமைவாதிகளும், அடிப்படைவாதிகளும் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். மேற்கத்திய நாடுகளுடன், அணு சக்தி ஒப்பந்தம் செய்தது, பொருளாதார தாராளமயமாக்கல் போன்ற அதிபரின் நடவடிக்கைகளை, பழமைவாதி கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.இந்நிலையில், அந்நாட்டில் அதிபர் தேர்தல், நேற்று முன்தினம் நடந்தது. இதில், தற்போதைய அதிபர் ஹசன் ரவுஹானியும், பழமைவாத அமைப்புகளின் சார்பில்,
இப்ராஹிம் ரைசியும் போட்டியிட்டனர்.தேர்தலில், நான்கு கோடிக்கும் அதிகமானோர் ஓட்டளித்தனர்; இதை தொடர்ந்து, ஓட்டு எண்ணிக்கை, நேற்று நடந்தது.
இதில், துவக்கம் முதலே ரவுஹானி முன்னிலை வகித்தார். இறுதியில், அவர், 2.35 கோடி ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்; அவரை எதிர்த்து போட்டியிட்ட இப்ராஹிம், 1.58 கோடி ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார்.
இது குறித்து துணை அதிபர் ஈசாக் ஜகாங்கிரி கூறுகையில், ''அதிபர் தேர்தல், மக்கள் உரிமைக்கும், அடிப்படைவாதத்திற்கும் இடையே நடந்த போட்டி. ரவுஹானியின் வெற்றி மூலம், ஈரான் புதிய பாதையில் தொடர்ந்து பயணம் செய்யும்,'' என்றார்.

மிதவாத தலைவர்



ஈரானின் செம்னன் மாகாணத்தில் பிறந்த ரவுஹானி, சட்டத்தில் பிஎச்.டி., ஆய்வு பட்டம் பெற்றவர். திருமணமாகி, மனைவியும், நான்கு குழந்தைகளும் உள்ளனர். மிதவாத தலைவரான அவர், ஈரானில் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்.
இரண்டாவது முறை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அவர், பிரசாரத்தின் போது, 'ஈரானில், அடிப்படைவாதிகளின் காலம் முடிந்து விட்டது; புதிய யுகத்தில் காலடி எடுத்து வைத்துள்ளோம். என் முடிவுகளுக்கு மக்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர்' என கூறி, ஓட்டு சேகரித்தார்.

நல்லுறவு மேம்படும்


ஈரானில், அகமது நிஜாத் அதிபராக இருந்தபோது, அணு ஆராய்ச்சியில் ஈடுபட்டதை அடுத்து, அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது. அதன் பின், அதிபரான ரவுஹானி, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் நல்லுறவை மேம்படுத்த முயன்று வருகிறார்.
இதனால், மேற்கத்திய நாடுகள், ஈரானுடன், அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன; பொருளாதார தடை நீக்கப்பட்டது. ஈரான் மீண்டும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, ஈரானின் பொருளாதாரம் சற்று மேம்பட்டு வருகிறது.
ஆனால், ரவுஹானியின் திட்டங்களுக்கு பழமைவாதிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், ரவுஹானி மீண்டும் வெற்றி பெற்றுள்ளதன் மூலம், மற்ற நாடுகளுடனான, ஈரானின் உறவு மேம்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை