உளவாளி என்ற சந்தேகத்தில் பாகிஸ்தானில் கைதான இந்தியரின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு: சர்வதேச நீதிமன்றம் உத்தரவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
உளவாளி என்ற சந்தேகத்தில் பாகிஸ்தானில் கைதான இந்தியரின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு: சர்வதேச நீதிமன்றம் உத்தரவு

ஹேக்: பாகிஸ்தானால் சிறை பிடிக்கப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி் குல்பூஷன் ஜாதவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் விதித்த மரண தண்டனைக்கு சர்வதேச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்திய கடற்படையைச் சேர்ந்த முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ்.

கடந்த 2016 மார்ச் 3-ம் தேதி அவர் ஈரானில் இருந்து பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம், மாஸ்கெல் பகுதிக்குச் சென்றார். அங்கு அவரை அந்த நாட்டு உளவுத் துறையினர் கைது செய்தனர்.

அவர் பாகிஸ்தானுக்கு எதிராக சதி செய்ததாகவும் கராச்சி குண்டுவெடிப்பில் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த ராணுவ மாஜிஸ்திரேட், குல்பூஷண் ஜாதவுக்கு ஏப்ரல் மாதம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர்.

இதனைத் தொடர்ந்து குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா தரப்பில் முறையிடப்பட்டது. குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நேற்று இந்திய நேரப்படி சரியாக 3. 30 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் மரண தண்டனை விதிக்கக்கூடாது என்ற இந்தியாவின் முறையீட்டில் நியாயம் இருக்கிறது.

எனவே மறு உத்தரவு வரும்வரை ஜாதவுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதை பாகிஸ்தான் நிறுத்திவைக்க வேண்டும்.

சர்வதேச நீதிமன்றத்தின் இந்த இடைக்கால உத்தரவை பாகிஸ்தான் ஏற்று நடக்க வேண்டும்.

சிறையில் அடைக்கப்பட்ட குல்பூஷன் ஜாதவை சந்திக்க இந்திய தரப்பில் தூதரகம் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் முட்டுக்கட்டை போட்டது ஏற்புடையதல்ல. வியன்னா ஒப்பந்தத்தின்படி குல்பூஷன் ஜாதவை இந்திய அதிகாரிகள் சந்திக்க அனுமதி அளித்திருக்க வேண்டும்.

ஜாதவ் கைது செய்யப்பட்ட முறையில் சந்தேகம் இருக்கிறது.   இந்த வழக்கில் மறு உத்தரவு வரும்வரை குல்பூஷன் ஜாதவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படக் கூடாது” என உத்தரவிட்டனர்.

.

மூலக்கதை