பாகுபலி 2 தமிழ் டப்பிங் படம் - ராம் கோபல் வர்மா

PARIS TAMIL  PARIS TAMIL
பாகுபலி 2 தமிழ் டப்பிங் படம்  ராம் கோபல் வர்மா

 பாகுபலி' படம் உருவாக ஆரம்பித்த போதே படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் எடுக்கிறோம் என அறிவித்தார்கள். 'பாகுபலி' படத்தின் முதல் பாகம் வெளிவந்த போதும் அது நேரடித் தமிழ்ப் படம் என்றே விளம்பரப்படுத்தினார்கள். படம் சம்பந்தப்பட்ட கலைஞர்கள் அனைவரும் அவர்களது பேட்டிகளில் தனித் தனியாக தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் பேசி நடித்தோம் என்றார்கள். படம் வெளிவந்த பின் பல காட்சிகள் தெலுங்கு உதட்டசைவில் இருந்தது. இருந்தாலும் அதையெல்லாம் மீறி படத்தை தமிழ் ரசிகர்களும் பார்த்து படத்தை வெற்றிப் படமாக்கினார்கள்.

 
'பாகுபலி 2' வெளியாவதற்கு முன்னரும் வழக்கம் போலவே இந்தப் படமும் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் எடுக்கப்பட்ட படம் என்றார்கள். ஆனால், படம் வெளிவந்த பின் பார்த்தால் படத்தில் எங்குமே தமிழ் உதட்டசைவைக் காணோம். முதல் பாகத்தில் இருந்த அளவிற்குக் கூட இல்லை, முற்றிலும் தெலுங்கு உதட்டசைவாகவே இருந்தது என பலரும் விமர்சித்தார்கள். ஆனால், படக்குழுவினர் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவேயில்லை.
 
படமும் தமிழ்நாட்டில் 100 கோடி வசூலைக் கடந்து தனித்த சாதனையுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இருந்தாலும் தெலுங்கு மீடியாக்களும், தெலுங்குத் திரையுலகினரும் 'பாகுபலி 2' படத்தை ஒரு தெலுங்குப் படமாக மட்டுமே கருதுகின்றனர். அவர்கள் தமிழில் வெளியான 'பாகுபலி' படத்தை டப்பிங் படம் என்றே குறிப்பிட்டு வருகின்றனர். படம் பல கோடி சாதனைகளைப் புரிந்துள்ளதால் அது ஒரு தெலுங்குப் படம் என்று சொல்லப்படும் என்ற படத்திற்கே கிடைக்க வேண்டும் என நினைக்கின்றனர்.
 
டிவிட்டரின் சர்ச்சை மன்னன் இயக்குனர் ராம்கோபால் வர்மா கூட நேற்று இந்தப் படம் பற்றிய ஒரு டிவீட்டில் கூட, “மிகப் பெரும் ஹிந்திப் படம், மிகப் பெரும் தமிழ் படம், மிகப் பெரும் கன்னடப் படம், மிகப் பெரும் மலையாளப் படம்” என்று சொல்லப்பட்டு ஒரு தெலுங்கு டப்பிங் படத்தைத் தவிர வேறு ஒன்றுமில்லை,” எனப் பதிவிட்டுள்ளார்.
 
கன்னடத் திரையுலகில் வேறு எந்த மொழி படங்களும் டப்பிங் ஆகாது என்பது கூட ராம்கோபால் வர்மாவுக்கு தெரியாமல் டிவீட் செய்துள்ளார். ராம்கோபால் வர்மா இயக்கி அமிதாப் பச்சன் நடித்து வெளிவந்த 'சர்க்கார் 3' படம் தோல்வியடைந்துள்ள நிலையில், ராம்கோபால் வர்மா மீண்டும் 'பாகுபலி' சர்ச்சையைக் கையில் எடுத்துள்ளார்.
 
'பாகுபலி 2' தமிழில் வெளியானது நேரடிப் படமா அல்லது தெலுங்கு டப்பிங் படமா என்பதை படக் குழுவினர் தெளிவுபடுத்த வேண்டும். ஒரு டப்பிங் படத்தை நேரடிப் படம் எனச் சொல்லி தமிழ் ரசிகர்களை ஏமாற்றக் கூடாது.

மூலக்கதை