சாம்பியன்ஸ் டிராபிக்கு டோனி தேர்வு இந்தியாவின் சாமர்த்தியமான முடிவு: மைக்கேல் கிளார்க் பாராட்டு

தமிழ் முரசு  தமிழ் முரசு
சாம்பியன்ஸ் டிராபிக்கு டோனி தேர்வு இந்தியாவின் சாமர்த்தியமான முடிவு: மைக்கேல் கிளார்க் பாராட்டு

மும்பை: ஐபிஎல் தொடரில் நேற்று முன் தினம் நடந்த குவாலிபயர்-1 போட்டியில் மும்பையை வீழ்த்தி புனே பைனலுக்கு முன்னேறியது. முதலில் பேட் செய்த புனே 18 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 121 ரன் மட்டுமே எடுத்திருந்தது.

டோனி 17 பந்துகளில் 14 ரன்னுடன் களத்தில் இருந்தார். மறுமுனையில் மனோஜ் திவாரி இருந்தார்.

கடைசி 2 ஓவர்களில் அவர்கள் 41 ரன் எடுக்க, 20 ஓவர்கள் முடிவில் புனே 162 ரன்களை குவித்தது. இறுதியில் டோனி ஆட்டமிழக்காமல் 26 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார்.

இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட ஓவர்கள் போட்டிகளில் தான் ஒரு சிறந்த ‘பினிஷர்’ என்பதை மீண்டும் நிரூபித்தார்.

பின்னர் பேட் செய்த மும்பை 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 142 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.   இது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறுகையில், ‘டோனியின் இன்னிங்ஸ்தான் போட்டியை மாற்றியது.

விக்கெட் கீப்பிங்தான் டோனியின் முதன்மையான பணி. அதில் அவர் மிக சிறப்பாக செயல்படுகிறார்.

பேட்டிங் பணி அவருக்கு இரண்டாவதுதான். டோனி திறமையானவர் என்பதை அறிந்திருப்பதால், அவர் நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும் என விரும்புகிறோம்.

செவ்வாய்க்கிழமை இரவு (நேற்று முன் தினம்) அவர் அதை செய்து விட்டார். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு (ஜுன் 1ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது) டோனியை தேர்வு செய்தது இந்தியாவின் சாமர்த்தியமான முடிவு.



அந்த தொடரில் டோனி சிறப்பாக விளையாடுவார். அதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை.

சாம்பியன்ஸ் டிராபியில் பேட்டிங் ஆர்டரில் டோனியை விராட் கோஹ்லி எந்த வரிசையில் களமிறக்குவார் என்பதை காண ஆவலாக உள்ளேன். ஆஸ்திரேலியாவின் ஆண்ட்ரூ சைமட்ஸை போல், டி20 போட்டிகளில் 4வது வீரராகவும், ஒரு நாள் போட்டிகளில் 5வது வீரராகவும் டோனியை களமிறக்க வேண்டும்.

இந்தியா கோப்பையை வென்றால், அதில் டோனியின் அனுபவம், திறன்களுக்கு முக்கிய பங்கு இருக்கும்’ என்றார்.


.

மூலக்கதை