நேரடியாக பைனலுக்கு முன்னேறுவது யார்? மும்பை - புனே பலப்பரீட்சை

தமிழ் முரசு  தமிழ் முரசு
நேரடியாக பைனலுக்கு முன்னேறுவது யார்? மும்பை  புனே பலப்பரீட்சை

மும்பை: ஐபிஎல் 10வது சீசனின் ‘பிளே ஆப்’ சுற்று இன்று தொடங்குகிறது. மும்பை வாங்கடே மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறும் குவாலிபயர்-1 போட்டியில், மும்பை இந்தியன்ஸ்-ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

புனேவுக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியுடன்தான் நடப்பு சீசனை மும்பை தொடங்கியது. எனினும் உடனடியாக சுதாரித்து கொண்ட மும்பை அதன்பின் வரிசையாக 6 போட்டிகளில் வென்றது.

அந்த வெற்றி பயணத்தை மற்றொரு லீக் போட்டியில் புனேதான் முடிவுக்கு கொண்டு வந்தது. அதன்பின் எஞ்சிய 6 போட்டிகளில் 4ல் வென்று, மொத்தம் 10 வெற்றிகளுடன் (20 புள்ளிகள்) புள்ளி பட்டியலில் மும்பை முதலிடத்தை பிடித்தது.

லீக் சுற்றில் மும்பை கண்ட 4 தோல்விகளில் 2 புனேவுக்கு எதிரானவை. நடப்பு சீசனில் பல சந்தர்ப்பங்களில் நிதிஷ் ராணா (333 ரன்கள்), பார்த்தீவ் பட்டேல் (325 ரன்கள்), ஹர்திக் பாண்டியா (226 ரன்கள், 6 விக்கெட்) குர்னல் பாண்டியா (10 விக்கெட்), பொல்லார்டு (362 ரன்கள்), கேப்டன் ரோகித் சர்மா (282 ரன்கள்), சிம்மன்ஸ் என பல வீரர்கள் மும்பையின் வெற்றிக்கு பங்களிப்பு வழங்கியுள்ளனர்.



இதுவரை 9 வீரர்கள் ஆட்ட நாயகன் விருது வென்றிருப்பது, தனிப்பட்ட ஓரிரு வீரர்களை நம்பி மும்பை இல்லை என்பதை காட்டுகிறது. கொல்கத்தாவுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில், ‘பென்ச்’ பலத்தை பரிசோதிக்கும் வகையில் 6 மாற்றங்களை மும்பை செய்தது.

இதன் மூலம் வாய்ப்பு பெற்ற அம்பதி ராயுடு, சவுரப் திவாரி ஆகியோர் அரை சதம் கடந்ததால், குவாலிபயர்-1 போட்டிக்கான அணி தேர்வில் மும்பை முகாமில் சற்றே குழப்பம் நிலவுகிறது. மறுபக்கம் புனே ‘பிளே ஆப்-க்கு’ முன்னேறியது மிகப்பெரிய திருப்பு முனைகளில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

முதல் 4 போட்டிகளில் 1ல் மட்டுமே வென்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த புனே, அதன்பின் விளையாடிய 10 போட்டிகளில் 8ல் வெற்றி வாகை சூடியது. இதன் மூலம் மொத்தம் 9 வெற்றிகளுடன் (18 புள்ளிகள்) இரண்டாமிடத்தை கைப்பற்றியது.

லீக் சுற்றின் கடைசி சில போட்டிகளில் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் (தென் ஆப்ரிக்கா) விளையாடவில்லை.

இருந்தபோதும் ஆடம் ஜம்பா மூலம் அந்த இழப்பை புனே சமாளித்தது.

இந்த சூழ்நிலையில் ‘பிளே ஆப்’ சுற்றில் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்சும் (இங்கிலாந்து) விளையாட மாட்டார். தென் ஆப்ரிக்கா-இங்கிலாந்து இடையேயான தொடரில் பங்கேற்பதற்காக பென் ஸ்டோக்ஸ், இம்ரான் தாஹிர் சென்று விட்டனர்.

பென் ஸ்டோக்சுக்கு பதிலாக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லூக்கி பெர்குசன் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஹானே (282 ரன்கள்), டோனி (240 ரன்கள்), டேனியல் கிறிஸ்டியன் (9 விக்கெட்), மனோஜ் திவாரி (259 ரன்கள்) உள்ளிட்ட நட்சத்திர வீரர்களுடன் வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனத்காட் (10 போட்டிகளில் 21 விக்கெட்), ராகுல் திரிபாதி (388 ரன்கள்), ஷர்துல் தாகூர் (8 விக்கெட்) என இளம் வீரர்களும் இருப்பது புனேவின் பெரும்பலம்.



 லீக் சுற்றில் புனேவுக்கு எதிராக அடைந்த 2 தோல்விகளுக்கு பதிலடி கொடுத்து 4வது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேற மும்பையும் (இதுவரை 3 முறை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள மும்பை 2 முறை கோப்பையை வென்றுள்ளது), முதல் முறையாக இறுதி போட்டிக்கு முன்னேற புனேவும் வரிந்து கட்டுகின்றன. இந்த போட்டியில் வெல்லும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு முன்னேறும்.

தோல்வி அடையும் அணி, ஐதராபாத்-கொல்கத்தா இடையேயான எலிமினேட்டரில் வெல்லும் அணியுடன் குவாலிபயர்-2ல் விளையாடும். அதில் வெல்லும் அணி 2வது அணியாக இறுதி போட்டிக்கு முன்னேறும்.

எனவே ‘ரிஸ்க்’ எடுக்காமல் முதல் வாய்ப்பிலேயே இறுதி போட்டிக்கு முன்னேறி விட இரு அணிகளும் முயல்வதால், போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கலாம்.

* வாங்கடே மைதானத்தில் இதுவரை விளையாடிய 2 ‘பிளே ஆப்’ போட்டிகளிலும் மும்பை வென்றுள்ளது. 2011 எலிமினேட்டரில் கொல்கத்தாவையும், 2015 குவாலிபயர்-1ல் சென்னையையும் மும்பை வீழ்த்தியுள்ளது.


* நடப்பு சீசனில் வாங்கடே மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் சராசரி ‘டோட்டல்’ 172. முதலில் பேட் செய்த அணிகள் 3 முறையும், ‘சேஸ்’ செய்த அணிகள் 4 முறையும் வென்றுள்ளன.

எனவே ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும்.
* வாங்கடே மைதானத்தில் மும்பை சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் இதுவரை 49 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் மட்டும் 50 விக்கெட்டுகளை கைப்பற்றிய 2வது பவுலர் என்ற சாதனையை அவர் படைக்க வாய்ப்புள்ளது.
* பிளே ஆப்’ முறை 2010ம் ஆண்டில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது.

அன்று முதல் இதுவரை 9 ‘பிளே ஆப்’ போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 128 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
* ஒட்டு மொத்தமாக மும்பை-புனே அணிகள் இதுவரை 4 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன.

இதில், புனே 3, மும்பை 1 போட்டியில் வென்றுள்ளன.


.

மூலக்கதை