மறக்க வேண்டிய சீசனை வெற்றியுடன் முடித்தது மகிழ்ச்சி : பெங்களூரு கேப்டன் கோஹ்லி கருத்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
மறக்க வேண்டிய சீசனை வெற்றியுடன் முடித்தது மகிழ்ச்சி : பெங்களூரு கேப்டன் கோஹ்லி கருத்து

டெல்லி: டெல்லியில் நேற்று இரவு நடந்த, ஐபிஎல் டி20 தொடரின் கடைசி லீக் போட்டியில் (56வது ஆட்டம்), டெல்லி டேர்டெவில்ஸ்-ராயல் ேசலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட் செய்த பெங்களூரு 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் குவித்தது.

கோஹ்லி 58 (45 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), கெய்ல் 48 ரன்கள் (38 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். பேட் கம்மின்ஸ் 2, ஜாகிர்கான், நதீம் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் பேட் செய்த டெல்லி 20 ஓவர்களில் 151 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ரிஷப் பண்ட் 45 ரன்கள் (34 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார்.

பவன் நெகி, ஹர்ஷால் பட்டேல் தலா 3, ட்ராவிஸ் ஹெட் 2, ஷேன் வாட்சன், அவேஸ்கான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இரு அணிகளும் ‘பிளே ஆப்’ வாய்ப்பை இழந்து விட்டதால், இது சம்பிரதாயமான போட்டியாகவே அமைந்தது.

3வது வெற்றியை பெற்ற பெங்களூரு கடைசி இடத்துடனும், 8வது தோல்வியை சந்தித்த டெல்லி 6வது இடத்துடனும் நடப்பு சீசனை நிறைவு செய்தன. ஹர்ஷால் பட்டேல் ஆட்ட நாயகன் விருது வென்றார்.



வெற்றி குறித்து பெங்களூரு கேப்டன் கோஹ்லி கூறுகையில், ‘நாங்கள் மறக்க வேண்டிய சீசன் இது. அனைத்து விஷயங்களிலும் தவறு செய்து விட்டோம்.

எனினும் வெற்றியுடன் நிறைவு செய்தது மகிழ்ச்சியளிக்கிறது. இது போன்ற ஆடுகளத்தில் அவேஸ்கான் பந்து வீசிய விதம் ஈர்க்க கூடியதாக இருந்தது.

உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்களால் கூட இப்படி செயல்பட முடியாது. ஹர்ஷால் பட்டேலின் திறமையை நன்கு அறிந்து வைத்துள்ளோம்.

அவர் மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி (ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், சாமுவேல்ஸ்), வெற்றிக்கு உதவினார்.

நான் பேட்டிங் செய்த விதமும் மகிழ்ச்சியளிக்கிறது’ என்றார்.

.

மூலக்கதை